கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பாஜக அமைச்சருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழலில், லட்சக்கணக்கான மக்கள் இந்நோய் காரணமாக பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் பல மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டன. அந்த வரிசையில் இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறிந்தது. 'கோவாக்சின்' என்கிற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த மருந்தை பாரத் பயோடெக் நிறுவனமானது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய வைரலாஜி துறையின் ஒத்துழைப்புடன் கண்டுபிடித்தது. இரண்டுக்கட்ட சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள இந்த மருந்தின் மூன்றாம் கட்ட சோதனை கடந்த மாதம் துவங்கியது. இதில் ஹரியானா மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ், முதல் தன்னார்வலராகத் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்.
இந்நிலையில், அவருக்கு தற்போது கரோனா தோற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், தனக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே தன்னுடன் தொடர்பிலிருந்த அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.