மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல்காந்தி அறிவித்தார். ஆனால், அவரே காங்கிரஸ் தலைவராக நீடிக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் தலைவர்களும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கருத்துத் தெரிவித்தனர்.
ஆனாலும், தனது முடிவில் ராகுல் உறுதியாக இருக்கிறார். காங்கிரஸின் சீனியர் தலைவர்களால் இளையவர்களை அனுசரித்து போக முடியவில்லை என்றும், காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்றும் ராகுல் கூறினார். சீனியர்கள் பதவி ஆசையால், பாஜகவுக்கு நிகரான கொள்கைகளையே கடைப்பிடிப்பதாகவும், இளைய தலைமுறையின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், அவர்களுடைய உழைப்பை சுரண்டுவதாகவும் ராகுல் கூறியிருந்தார்.
இந்நிலையில் ராகுல் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார் என்றும், கட்சிக்கு பொருத்தமான தலைவரை இறுதிசெய்யும்வரை அவர் தலைவராக நீடிப்பார் என்றும் செய்தித்தொடர்பாளர் சுர்ஜிவாலா தெரிவித்திருக்கிறார்.
இனி வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தல்களை புதிய தலைவரின் தலைமையில் சந்திப்பது என்றும், அதேசமயம், காங்கிரஸில் நேரு குடும்பத்தினரின் பிடி விட்டுப்போகாத அளவுக்கு புதிய தலைவர் செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக, மன்மோகன்சிங்கைப் போல திறமையான, நேரு குடும்பத்தின் மீது விசுவாசமான தலைவராக அவர் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நேரு, இந்திரா குடும்பத்தை நோக்கியே பிரச்சாரம் இருப்பதால் இநத் முடிவு என்று கூறுகிறார்கள்.