பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள் அமாவாசை நாட்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும் என உ.பி மாநில டிஜிபி அறிவித்திருப்பது உத்தரப் பிரதேசத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநில டிஜிபி விஜயகுமார் அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'உத்தரப் பிரதேசத்தில் நிகழும் திருட்டு, கொலை உள்ளிட்ட செயல்களின் குற்ற ஆவணங்களை ஆய்வு செய்ததில் அமாவாசை காலகட்டத்தில் அதிக குற்றங்கள் நடைபெற்றிருக்கிறது. அமாவாசைக்கு முன்பும், அமாவாசை மற்றும் அதற்கு பின்புதான் அதிக குற்றங்கள் நிகழ்ந்துள்ளது. எனவே அமாவாசை நாட்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பும், அமாவாசை அன்றும், அமாவாசைக்கு பின்னரான ஒரு வாரத்திற்கும் காவல்துறையினர் மிகவும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்' என அறிவுறுத்தல் கொடுத்துள்ளார்.
ஒரு மதத்தைச் சார்ந்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில், அமாவாசையில் அதிகம் திருட்டு நடப்பதாக அம்மாநில டிஜிபி சொல்லியிருப்பதும் இணைய வாசிகளால் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.