கரோனா வைரஸ் பரவல் மற்றும் பொருளாதார நிலை உள்ளிட்டவை குறித்த மத்திய அரசின் பொய்யுரைகளை மக்கள் இனி நம்ப மாட்டார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொருளாதாரம், எல்லைப்பாதுகாப்பு, கரோனா தடுப்பு என பல்வேறு விஷயங்களில் மத்திய அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அந்த வகையில், கரோனா பரவல் கட்டுப்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு முழுமையாகத் தோல்வி அடைந்துவிட்டது. அரசின் நிர்வாகத் தவறுகளால், இந்தியாவில் இன்று கரோனா பாதிப்பு ஒரு கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. வைரஸ்காய்ச்சலுக்கு ஆயிரக்கணக்கானோர் பலியாகிவிட்டனர்.
அதேபோல, முறையாகத் திட்டமிடப்படாத ஊரடங்கால் லட்சக் கணக்கான மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. ஆனால், தனது இந்த தோல்விகளை எல்லாம் பொய்கள் மூலமாகப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மறைத்துவருகிறது. வெறும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் மக்களை ஏமாற்ற முயல்கிறது. ஆனால், அரசின் இந்த பொய்யுரைகளை மக்கள் இனி நம்ப மாட்டார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.