அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார். மேலும் அதுதொடர்பாக அயோத்தி மேயர் ரிஷகேஷ் உபாத்யா கூறுகையில், “அயோத்தியில் சரயு நதிக்கரையில் 151 மீட்டர் உயரத்தில் இந்த ராமர் சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு தீபாவளி அன்று வெளியிடப்படும்” எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் லக்கிம்பூர் கேரி எனும் இடத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ‘அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்படுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது’ என்று கூறியுள்ளார். மேலும் அவர் “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று துறவிகள் வலியுறுத்தியுள்ளனர். அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாகவே பாஜக எப்போதும் இருந்துவருகிறது. அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்படுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. மேலும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, தற்போது கருத்து சொல்ல விரும்பவில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். உரிய நேரம் வரும்போது ராமர் கோயில் கட்டப்படும் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று கூறினார்.