உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 10ஆம் தேதி தொடங்கி, மார்ச் ஏழாம் தேதிவரை ஏழு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் உத்தரப்பிரதேச தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்திருந்த அகிலேஷ் யாதவ், தற்போது தேர்தலில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து அகிலேஷ் யாதவிடம் கேள்வியெழுப்பபட்டபோது "நான் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தால், ஆசம்கர் மக்களிடம் அனுமதி கேட்பேன். என்னை அவர்கள் அந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுத்துள்ளதால், அவர்களிடம் நான் அனுமதி பெற வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் அகிலேஷ் யாதவ், மெயின்புரியில் உள்ள கர்ஹால் தொகுதியில் போட்டியிடப்போவதாக சமாஜ்வாடி கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கர்ஹால் தொகுதியில் 1993 ஆம் ஆண்டு முதல் (2002 தேர்தலை தவிர்த்து) சமாஜ்வாடி கட்சியே வெற்றி பெற்று வருகிறது. மேலும் கர்ஹால் சட்டமன்ற தொகுதி அடங்கியுள்ள மெயின்புரி நாடாளுமன்ற தொகுதியில் அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் யாதவ் தற்போது எம்.பியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.