
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, நடைபெறும் அடுத்தக்கட்ட தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், வாக்கின் வலிமையைப் புரிந்துக்கொண்டு வாக்களிக்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “உங்கள் ஒரு வாக்கின் வலிமையைப் புரிந்து கொள்ளுங்கள்! உங்கள் ஒரு வாக்கு நாடு முழுவதும் நடக்கும் பயங்கரமான பாகுபாடு மற்றும் அநீதியை ஒழிக்கும். உங்கள் ஒரு வாக்கு, 30 லட்சம் அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையை ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் தொடங்க வைக்கும்.
உங்கள் ஒரு வாக்கு, தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகள், பங்கேற்பு மற்றும் இடஒதுக்கீட்டை பாதுகாக்கும். உங்கள் ஒரு வாக்கு பழங்குடியினரின் நீர், காடு மற்றும் நிலத்தின் மீதான உரிமைகளைப் பாதுகாக்கும். இந்தியா கூட்டணிக்கான உங்கள் ஒவ்வொரு வாக்கும், வலுவான ஜனநாயகத்தையும், அதிகாரம் பெற்ற குடிமக்களையும் உருவாக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.