
தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். ''தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது பெரிய சமுத்திரம் மாதிரி. தமிழ்நாடு என வரும் பொழுது ஜெயலலிதாவின் கட்சி தலைமை ஏற்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஜெயலலிதா தொண்டர்கள் ஓரணியில் நிற்கவேண்டும் என சொன்னேன். அதுதான் நடக்கிறது'' என்றார்.
'நீங்கள் அதிமுக தலைமையை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்களா?' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலளித்திருக்கிறார். நாங்கள் எல்லாம் தமிழ்நாட்டின் தீய சக்தி திமுகவை வீழ்த்துவதற்காக எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் வந்தவர்கள். அவர்களின் கொள்கைகளை தங்கி செல்பவர்கள். தீயசக்தி திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவும் இந்தியாவின் பிரதமர் மோடியின் கரத்தை வலுபடுத்துவதற்காகவும் அவருடைய அணியில் இருக்கிறோம்.

மோடி அவர்கள் அணியில் நாங்கள் இருக்கிறோம். அதனால் திமுகவை வீழ்த்த வேண்டும் என்கிற ஒரு குறிக்கோளோடு செயல்படுகிறோம். உங்களுக்கெல்லாம் ஞாபகம் இருக்கும் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் இப்பொழுது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதலமைச்சராக இருந்த பழனிசாமியிடம் என்ன பேசினார் என்பதை நண்பர் ஓபிஎஸ், வைத்திலிங்கம் ஆகியோர் வெளிப்படையாகச் சொன்னார்கள். அதை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 2026-ல் திமுகவை வீழ்த்துவதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உறுதியாக இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்'' என்றார்.
அதிமுக தரப்பில் உங்களிடம் தொடர்பு கொண்டு பேசினார்களா? என்ற கேள்விக்கு ''இல்லை யாரும் தொடர்பு கொள்ளவில்லை'' என்றார்.