அமைதியான முறையில் பேரணியில் ஈடுபடுவது என்பது சாசனம் கொடுத்த உரிமையாகும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்து மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதில் குறிப்பாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், பஞ்சாபிலிருந்து டெல்லி வரை செல்ல ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்றிணைந்து பேரணி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்த பேரணி ஹரியானா பஞ்சாப் மாநில எல்லையான ஷம்புவில் இன்று நடைபெற்றபோது, அங்கிருந்த விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதோடு, வேளாண் சட்டங்களை திரும்பப்பெறவும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், விவசாயிகள் பேரணி மேலும் முன்னேறாமல் இருக்கும் வகையில் அதனைக் கலைக்க முற்பட்ட காவல்துறையினர், எல்லையில் கூடியிருந்த விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகை குண்டு வீசியும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கூட்டத்தைக் கலைத்தனர்.
இந்நிலையில், விவசாயிகளின் பேரணியை காவல்துறையினர் அனுமதிக்கத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதற்கு பதிலாக, அமைதியான முறையில் பேரணி செல்லும் விவசாயிகள் தடுக்கப்படுகிறார்கள். அவர்கள் மீது நீர் பாய்ச்சி விரட்டி அடிக்கின்றனர். அமைதியான முறையில் பேரணி நடத்துவது என்பது அரசியல் சாசனம் தந்த உரிமையாகும்" என்று கூறியுள்ளார்.