
திருச்சி கொட்டாம்பட்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் நந்தகுமார்(27). நெல்லை மாவட்டம் ராதாபுரம் இலங்கை அகதிகள் முகாமை தியாகராஜன் மகள் கீதா(23). இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நந்தகுமார் - கீதா இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் சில காலம் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றாலும், அதன்பிறகு நந்தகுமார் சரிவர வேலைக்கு செல்லாததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வேலைக்கு செல்லாமல் கணவர் நந்தகுமார் பிரச்சனை செய்து வந்ததால் ஆத்திரமடைந்த கீதா அவரிடம் இருந்து பிரிந்து சமூகரெங்கபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் வீட்டிற்கு வந்த கீதா அங்கேயே தங்கியிருந்தார்.
அவ்வப்போது கணவர் நந்தகுமார் மட்டும் சமூகரெங்கபுரத்திற்கு வந்து மனைவியை பார்த்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூகரெங்கபுரத்திற்கு வந்த நந்தகுமார் அங்கேயே தங்கி வேலைப்பார்த்து மனைவி கீதாவுடனே வாழ்ந்து வந்தார். இந்த சூழலில்தான் நேற்று முந்தினம் கணவன் மனைவி இடையே நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு கணவர் நந்தகுமார் வீட்டில் இருந்து வெளியேறினார். இதனால் வேதனையடைந்த கீதா விஷ குடித்து மயங்கி விழுந்துள்ளார் இதனையறிந்த உறவினர்கள் கீதாவை மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கீதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து எல்லோரும் தன்னை தான் குற்றம் கூறுவார்கள் என்றும், போலீசார் தன்னை விசாரணைக்கு அழைத்துச் செல்வார்கள் என்ற பயத்திலும் வீட்டிற்குள் சென்ற நந்தகுமார் கீதாவின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நந்தகுமாரின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்த வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.