செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே அமைந்துள்ளது அகரம்தென் ஊராட்சி. இப்பகுதியில் உள்ளது மும்மூர்த்தி அவென்யூ. இங்கு, கொத்தனார் பாபு அருள்ஜோதி என்பவருக்கு சொந்தமாக 1100 சதுர அடி கொண்ட நிலம் உள்ளது. இதனை, இந்து முன்னணியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சந்தானம் என்பவரிடம் பாபு அருள்ஜோதி வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாபு அருள்ஜோதி தனது சொந்த நிலத்தில் வீடு கட்ட முடிவு எடுத்துள்ளார். இதையடுத்து, 3 அடுக்கு மாடிவீடு கட்ட சி.எம்.டி.ஏ.விடம் முறைப்படி அனுமதி பெற்றுள்ளார். தொடர்ந்து, நிலம் அமைந்துள்ள பகுதியானது, அகரம்தென் ஊராட்சிகுட்பட்டது என்பதால்.. அனுமதி வாங்க அகரம்தென் ஊராட்சி அலுவலகத்திற்கு நேரடியாக சென்றுள்ளார். அங்கு, அகரம்தென் ஊராட்சி செயலாளர் பிரபாகரன் என்பவரைச் சந்தித்து, கட்டட அனுமதி கோரி மனு அளித்துள்ளார். அப்போது, ஊராட்சி அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரியும் ஹரிகிருஷ்ணன் என்பவர், கட்டட அனுமதி வாங்கவந்த பாபு அருள்ஜோதியை வழிமறித்துள்ளார். அப்போது பேசியவர், ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரனை பார்த்து விட்டீர்களா, ஒரு கிச்சனுக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் 3 அடுக்கு மாடி கிச்சனுக்கு 90 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாபு அருள்ஜோதி முடியாது எனக் கூற, நீங்கள் எதுவென்றாலும் தலைவரிடம் பேசுங்கள் எனக் கூறி அவரை அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, வீடு திரும்பிய பாபு அருள்ஜோதி, அகரம்தென் ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரனை செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, பேசிய திமுகவைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன், ''வீடுகட்ட உள்ள இடம் சந்தானம் வீட்டிற்கு எதிரில் உள்ள இடம் தானே.. அனுமதி கொடுக்க ரொம்ப யோசிக்கணுமே..'' எனக் கூறியுள்ளார். இறுதியாக பேசியவர், ''உன் சொந்த வீட்டின் ஆவணங்களை எடுத்துக் கொண்டு நேரில் வா..'' என்று அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஆவணங்களை வாங்கிக் கொண்டு ஊராட்சி தலைவர் மிரட்டுவார் என எண்ணிய பாபு அருள்ஜோதி, ஊராட்சி தலைவரிடம் பேசிய ஆடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, கட்டட அனுமதி கோரினால் ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரன் 90 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக பதிவிட்டார். அதில், தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தின் எக்ஸ் தள பக்கத்தை டேக் செய்து இருந்தார். இதையடுத்து, கட்டடம் கட்ட லஞ்சம் கேட்டதாக கூறப்படும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் லஞ்சம் கேட்டதாக கூறிய குற்றச்சாட்டு குறித்து சி.எஸ்.ஆர்.பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால், ஒரு வாரம் ஆகியும் போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், கட்டடம் வழங்க அனுமதியும் வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருவதாக நில உரிமையாளர் பாபு அருள்ஜோதி குற்றம்சாட்டி வருகிறார். இதனிடையே, மீண்டும் பாபு அருள்ஜோதி ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரனிடம் போனில் பேசியதாகவும், அப்போது அவர் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தாக புகார் ஒன்றையும் போலீசாரிடம் அளித்ததுள்ளார். இதையடுத்து, தனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று செய்தியாளர்களைச் சந்தித்து நடந்ததை கொத்தனார் பாபு அருள்ஜோதியும், அந்த இடத்தின் முந்தைய உரிமையாளர் சந்தானமும் விரிவாக பேசினர்.