புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காவல்துறைத் தலைவர் பாலாஜி ஸ்ரீவஸ்தவாவை அழைத்துப் பேசினார். அப்போது காவல்துறையில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் வரும் மார்ச் மாதத்திற்குள் நிரப்புவதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்கும்படி கூறினார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பதவி உயர்வு அடிப்படையில் காலியாக உள்ள சுமார் 63 உதவி ஆய்வாளர் பதவிகளுக்கு தேர்வு வைத்து பிப்ரவரி முதல் வாரத்திற்குள் நிரப்புவதென முடிவெடுக்கப்பட்டது.
காலியாக உள்ள நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்படவேண்டிய சுமார் 47 உதவி ஆய்வாளர் பதவிகளை நிரப்புதற்கான பணிகளை உடனடியாக மேற்கொண்டு அந்தப் பதவிகளையும் மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் நிரப்பவேண்டும். இது தொடர்பான விண்ணப்பங்களை கோருவதற்கான விளம்பரம் ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும்.
அதுபோல காலியாக உள்ள 390 போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான உடல்தகுதித் தேர்வு மார்ச் முதல் வாரத்தில் நடைபெறும். இதற்கான ஒப்புதல்கள் சம்பந்தப்பட்ட கோப்புகளில் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதால், இதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு காவல்துறை தலைவரை கேட்டுக்கொண்டார்.
மேலும் காவல்துறையில் கான்ஸ்டபிள் முதல் காவல்துறை கண்காணிப்பளார் வரை உள்ள அனைத்துப் பதவிகளின் பணி ஒழுங்குபடுத்துதல், பணிநிரந்தரம் செய்தல், போன்ற நிர்வாகப் பணிகளையும் முடிக்கும் படி முதல்வர் நாராயணசாமி கூறினார். இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக காவல் துறைத் தலைவர் பாலாஜி ஸ்ரீவஸ்தவா உறுதியளித்தார். இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.