ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.
ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை மத்தியில் பாஜக அமைத்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும் நடந்தது. இதில் 25 ஆண்டுகளாக ஒடிசா மாநிலத்தை ஆண்டு வந்த நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதாதளம் கட்சியைப் பாஜக தனிப்பெரும்பான்மையில் வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து ஒடிசாவின் முதல்வராக பழங்குடியினத்தை சேர்ந்த மோகன் சரண் மாஜி என்பவரை பாஜக அறிவித்துள்ளது. இதையடுத்து ஒடிசா முதல்வராக மோகன் சரண் மாஜி இன்று பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில் மோகன் சரண் மாஜிக்கு அரசு இல்லம் தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கடந்த 24 ஆண்டுகளாக முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் தனது சொந்த வீட்டில் இருந்தபடியே ஆட்சி செய்தார். இதன் காரணமாக ஒடிசாவில் முதல்வருக்கு என்று தனியாக அரசு இல்லம் ஒன்று இல்லாமல் போனது. இந்த நிலையில் புதிதாகப் பதவியேற்கவுள்ள பாஜக முதல்வர் மோகன் சரண் மாஜி ஆட்சி செய்ய வீடு அல்லது அதற்குரிய இடத்தை தேடும் பணிகளை மாநில நிர்வாகத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.