தென்மேற்கு பருவமழை கேரளாவில் நேற்று முன் தினம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு 'வாயு' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் மற்றும் விராவல் இடையே நாளை கரையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால், குஜராத் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் குஜராத் மாநிலத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அரசு ஏற்பாடு செய்துள்ள முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுள்ளன. தென் கிழக்கு அரபி கடலில் மீனவர்கள் யாரும் கடலுக்கும் செல்ல வேண்டாம் என்றும், கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்படுள்ளன.
தீவிர புயலான வாயு கரையை கடக்கும் போது மணிக்கு 110 முதல் 135 கி.மீ வேகம் வரை காற்று வீசும் என்றும் கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாயு புயல் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் குஜராத் மாநில அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், பேரிடர் மீட்புத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். புயலின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
குஜராத் மாநிலத்தில் உள்ள சுற்றுலா பயணிகளை பத்திரமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை குஜராத் மாநில அரசு மேற்கொண்டுள்ளது. அம்மாநில அரசு சார்பில் போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் கடற்கரை பகுதியில் உள்ள சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அம்மாநில முதல்வர் விஜய் ரூபாணி வேண்டுகோள் விடுத்துள்ளார். குஜராத் மாநிலத்தில் மட்டும் இது வரை சுமார் 3 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என முதல்வர் விஜய் ரூபாணி தெரிவித்தார்.