புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட சில அர்சியல் கட்சிகள் மற்றும் பொது நல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தக்கோரி சட்டசபையை முற்றுகையிடப்போவதாக பாரதிய ஜனதா கட்சி அறிவித்திருந்தது. அதன்படி நேற்று (19/11/2019) அவர்கள் புதுச்சேரி மிஷன் வீதி மாதா கோவில் அருகே கூடினார்கள். அங்கிருந்து சட்டசபை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலம் ஆம்பூர் சாலை அருகே வந்த போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அதனைத் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் அங்கேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநில அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி மாநில தலைவர் சுவாமிநாதன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர்கள் ஏம்பலம் செல்வம், சோமசுந்தரம், துரை.கணேசன், மாநில செயலாளர்கள் நாகராஜ், சாய்சரவணன், முருகன், ஜெயந்தி, லட்சுமி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது சிலர் போலீசார் வைத்திருந்த தடுப்புகளை தள்ளிக்கொண்டு செல்ல முயன்றனர். அதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீசார், சிறிது நேரத்திற்கு பின் அனைவரையும் விடுவித்தனர்.