Skip to main content

”பெட்ரோல் டீசல் விலை உயர்வில் மத்திய அரசின் தலையீடு கிடையாது”-  பாஜக அமைச்சர்....

Published on 17/10/2018 | Edited on 17/10/2018
pradhan


பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது என்று பெட்ரோலிய அமைச்சர் தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தினசரி அதிகரித்துகொண்டே இருக்கிறது. இதுகுறித்து பிரதமர் மோடியும் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இருந்தாலும் விலையை குறைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

இந்நிலையில், டெல்லியில் இன்று பேசியுள்ள பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில்,”பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயிப்பதில் மத்திய அரசின் தலையீடு கிடையாது. சர்வதேச விலைக்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்களே தினமும் மாற்றி அமைக்கின்றன,” என்றார்.  

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் விலை அதிரடியாக உயரப்போகும் அபாயம்!

Published on 12/12/2022 | Edited on 12/12/2022

தெ.சு. கவுதமன்

 

Risk of sudden rise in petrol price!!

 

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைப் பொறுத்தவரை முன்பெல்லாம் ஒரு சில மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கக்கூடிய முறையே இருந்து வந்தது. கச்சா எண்ணெய் விலை அதிகரித்துக்கொண்டே வரும் சூழலில் தான் பெட்ரோல் டீசலின் விலை உயர்த்தப்படும். ஆனால் 2017ஆம் ஆண்டு ஜூன் முதல் பெட்ரோலிய விலை  நிர்ணயத்தை பெட்ரோலிய நிறுவனங்களின் கைகளுக்கு மாற்றியதுடன் இனி தினசரி கச்சா எண்ணெய் விலையேற்ற இறக்க சூழலுக்கேற்ப பெட்ரோல் விலையிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்குமென்று அப்போதைய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். 

 

இந்த அறிவிப்பின் மூலம் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்படாமல் சிறிது சிறிதாகவே உயர்த்தப்படுமென்றும் கச்சா எண்ணெய் விலை குறையும்போது அதற்கேற்ப விலை குறையவும் செய்யுமென்றும் தெரிவித்தார். இதனால் நுகர்வோர்களுக்கு நல்லதொரு பயனளிப்பதாக இருக்குமென்றும் கூறினார். அப்போதைய காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை சராசரியாக பீப்பாய்க்கு 60 டாலர்கள் என்ற அளவில் இருந்தது. அதில் பெரிய மாற்றங்கள் இல்லாததால் பெட்ரோல், டீசல் விலையேற்றமும் மக்களைப் பெரிதும் பாதிக்காததாக இருந்தது.  

 

ஆனால் பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் கச்சா எண்ணெய் விலை இதைவிடக் குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் உயர்த்திக்கொண்டே சென்றார்கள். அதேபோல், கொரோனா லாக்டௌன் காலத்தில் கச்சா எண்ணெய் விலை அடிமட்டத்துக்குப் போனபோதும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை. கொரோனாவுக்குப் பின்னரும்கூட கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை. இதுகுறித்து மத்திய அரசைக் கேள்வியெழுப்பும் போதெல்லாம், இதெல்லாம் எங்கள் கைகளில் இல்லை; எண்ணெய் நிறுவனங்கள் தான் முடிவெடுக்குமென்று கூறினார்கள். ஆனால் எண்ணெய் நிறுவனங்களைக் கேட்டாலோ, இதெல்லாம் பெட்ரோலிய அமைச்சகத்திடம் தான் கேட்க வேண்டுமென்று கூறின. 

 

ஆனால், இதில் உண்மையென்னவெனப் பார்த்தால், பெட்ரோலிய அமைச்சகத்துக்கே இதுகுறித்த மறைமுகப் பவர் இருப்பதாகத் தெரிகிறது. எப்படியென்றால், இந்தியாவில் எப்போதெல்லாம் மாநிலத் தேர்தல்கள் வருகின்றனவோ, அப்போதெல்லாம் பெட்ரோல் டீசல் விலை சிறிது நாட்களுக்கோ சில மாதங்களுக்கோ மாற்றமில்லாமல் அப்படியே வைத்திருக்கிறார்கள். கடந்த 2019ஆம் ஆண்டில் அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரா, சிக்கிம் மாநிலத் தேர்தல்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் விலையில் மாற்றமில்லாமல் வைத்துக்கொண்டார்கள்.  

 

2020ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் பீகார் மாநிலத் தேர்தல் வந்தபோதும் அதற்கு முன்பாக ஒன்றரை மாத காலத்துக்கு பெட்ரோல் விலை மாறாமல் பார்த்துக்கொண்டார்கள். அதேபோல், மேற்கு வங்கத்துக்கு 2021ஆம் ஆண்டில் தேர்தல் வந்தபோது தேர்தலுக்கு முந்தைய ஒரு மாத காலத்துக்கு பெட்ரோல் விலை மாறாமல் பார்த்துக்கொண்டார்கள். கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஐந்து மாநிலத் தேர்தல் நடந்தபோது தேர்தலுக்கு முந்தைய 4 மாதங்களுக்கு விலையேறாமல் பார்த்துக்கொண்டனர். 

 

தற்போது குஜராத், இமாச்சல பிரதேச தேர்தலுக்கு முன்பாகவும் ஆறு மாத காலத்துக்கு விலை மாற்றமில்லாமல் பார்த்துக்கொண்டார்கள்.  இதையெல்லாம் கவனிக்கும்போது இந்த விலையேற்ற இறக்கங்களில் பெட்ரோலிய அமைச்சகமே அரசுக்கு சாதகமாக விலையேற்ற, இறக்கத்தை நிர்ணயிப்பதாக அறிய  முடிகிறது. எனவே, தற்போது இரு மாநிலத் தேர்தல்களும் முடிவடைந்துள்ள நிலையில் இனி பெட்ரோல், டீசல் விலையேற்றம் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்க்கலாம்.

 

 

Next Story

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய ஆட்டோ தொழிற்சங்கத்தினர்! (படங்கள்) 

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

சென்னையில் இன்று (24.07.2021) வள்ளுவர் கோட்டம் அருகில், சென்னை மேற்கு, கிழக்கு ஆட்டோ தொழிற்சங்க தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை (LPF) சார்பாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை ஆட்டோ தொழிற்சங்க தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை மாநிலச் செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார்.

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நடராஜன் பேசியதாவது, “ஒன்றிய பாஜக அரசின் மக்கள், தொழிலாளர் விரோத போக்கை மற்றும் ஜனநாயக விரோத போக்கைக் கண்டிக்கும் விதமாகவும், தொடர்ச்சியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 70 டாலர் இருக்கிற நிலையில், பெட்ரோல் 103 ரூபாய்க்கும், டீசல் 95 ரூபாய்க்கும் விற்பதைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 2014ஆம் ஆண்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 109 டாலராக இருந்தது. அன்று பெட்ரோலின் விலை 71.51 ரூபாயாக இருந்தது. இன்று சர்வதேச சந்தையில் ஒரு பேரல் 70 டாலராக இருக்கும்போது, பெட்ரோல் 103 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரியாக 74 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டது. இந்த ஏழு ஆண்டுகளில் இது, சற்றேறக்குறைய 456 சதவீதம் உயர்ந்து 3 லட்சம் கோடியாக கலால் வரி வசூலிக்கப்படுகிறது. ஆகவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் அதன் பலனை நுகர்வோர் அனுபவிக்கவிடாமல் செய்துவரும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்புகளின் சார்பாக நடைபெற்றுவருகிறது. இந்த விலையைக் குறைக்காவிட்டால் தொடர்ந்து பல இடங்களில் இந்தப் போராட்டம் நடைபெறும்” என தெரிவித்தார்.