![Puducherry Legislative Assembly; DMK walkout condemning BJP minister!](http://image.nakkheeran.in/cdn/farfuture/F4aV4oa8YeIAcqfv2aq-Da_hcjRYjk_kZJu4vGvTZFg/1661253819/sites/default/files/inline-images/th_3091.jpg)
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று துணைநிலை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். திமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத் பேசிய போது, துணைநிலை ஆளுநர் உரையில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டிப் பேசினார். அபபோது, பா.ஜ.கவை சார்ந்த அமைச்சர் சாய்.சரவணகுமார், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சம்பத்தை பேசவிடாமல் தொடர்ந்து குறுக்கீடு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினரை பேரவையில் பேசவிடாமல், ஜனநாயகத்தை மீறி அநாகரிகமாக நடந்துகொண்ட அமைச்சரை கண்டித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா.சிவா தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா.சிவா தலைமையில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் செல்வத்தை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், "மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு சபையை மேலும் நான்கு நாட்கள் நீட்டிக்க வேண்டும்" என வலியுறுத்துவதாக தெரிவித்திருந்தனர்.