அதிகரித்துவரும் வெட்டுக்கிளி படையெடுப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், வெட்டுக்கிளிகளை அழிக்க புதிய மற்றும் நவீன இயந்திரங்களை இறக்குமதி செய்ய உள்ளது மத்திய அரசு.
ஜூலை 2019 முதல் இந்த ஆண்டின் தொடக்கம் வரை ராஜஸ்தான் மாநிலத்தின் 10 மாவட்டங்களில் 3.6 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்களைச் சேதப்படுத்திய வெட்டுக்கிளிகள் படையெடுப்பு, பின்னர் அங்கிருந்து பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கும் பரவியது. லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள விவசாயப் பயிர்களை நாசம் செய்தன. இந்நிலையில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்ய ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே மேற்கு மற்றும் கிழக்கு ராஜஸ்தானில் சுமார் 5,00,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரவியுள்ள பயிர்களை அழித்துள்ள இந்த கூட்டம் டெல்லி, மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் வெட்டுக்கிளிகளை அழிக்க புதிய மற்றும் நவீன இயந்திரங்களை இறக்குமதி செய்ய உள்ளது மத்திய அரசு. இதுகுறித்து பேசிய மத்திய வேளாண்துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, பூச்சிக்கொல்லிகள் தெளிக்கும் 60 நவீன இயந்திரங்கள், மற்றும் சிறப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட 5 ஹெலிகாப்டர்கள் இங்கிலாந்திடம் இருந்து வாங்க திட்டமிடப்பட்டு முன்பதிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். இதில், ஜூன் முதல் வாரத்தில் பாதி எண்ணிக்கையிலான இயந்திரங்கள் இந்தியா வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.