8 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்தது. இந்திய அணி அரையிறுதி போட்டியில் இங்கிலாந்துடன் விளையாடி தோல்வி அடைந்ததால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறாமல் வெளியேறியது. வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடி வெற்றி பெற்றது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மற்றும் பிற மாநில மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் உள்ள லாலா லஜபதிராய் மெமோரியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் இங்கிலாந்துடன் தோற்ற நிலையில் இந்தத் தோல்வியை சில மாணவர்கள் கொண்டாடியதால் பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இரு பிரிவு மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒன்பது மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. பீகார் மற்றும் பிற மாநில மாணவர்கள் மதரீதியாகக் கோஷம் எழுப்பியதால் சண்டை வந்ததாக காஷ்மீர் மாணவர்கள் கூறினர். ஆனால் காஷ்மீர் மாணவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவிற்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர், இதைக் கேட்ட ஹாஸ்டல் வார்டன் அவர்களது அறைக்குச் சென்று எச்சரித்தார். வார்டனை அவர்கள் பிடித்து வைத்துக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் நாங்கள் அவரை மீட்கச் சென்றோம். அவர்கள் எங்கள் மீது கற்கள் மற்றும் கண்ணாடிகளை வீசினர் என பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் கூறினர்.
இதனால் பதற்றமான சூழல் உருவானது. தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு காவல்துறை மேற்கொண்டு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.