புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் கரோனாவுக்கான ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு என்றும், ரெம்டெசிவிர் மருந்தை வெளியில் இருந்து வாங்கி வர சொல்வதாகவும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கரோனா நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர். வெளிச்சந்தையில் கரோனாவுக்கான ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காததால் நோயாளிகள் அவதி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், "புதுச்சேரியில் கரோனா நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்து கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் புதுச்சேரி வருவார்கள் என்பதால் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அபாயகரமான கட்டத்திற்கு வரக்கூடாது என்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு பற்றி விசாரிக்க சுகாதாரத்துறைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.