பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 31- ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று அறிவித்த நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்று (30/06/2020) புதுச்சேரி மக்களுக்கு வீடியோ பதிவு மூலம் செய்தி வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "புதுச்சேரியில் பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்துவதன் காரணமாக கடந்த சில நாட்களாக கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. மத்திய அரசின் உத்தரவுப்படி, புதுச்சேரி மாநிலத்திலும் ஜூலை 31- ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும். அதேசமயம் போராட்டம், பொதுக்கூட்டம், ஊர்வலத்திற்கு தடை நீட்டிக்கப்படுகிறது. பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கும் ஜூலை 31- ஆம் தேதி வரை தடை தொடரும். மேலும் இரவு 10.00 மணியிலிருந்து அதிகாலை 05.00 மணி வரை ஊரடங்கு முழுமையாக, கடுமையாக மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
தொடர்ந்து மக்கள் வெளியே வரும்போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கும்போதும், வெளியே வரும்போதும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அனைத்துக் கடைகள், கோவில்கள் தொழிற்சாலைகளில் தெர்மல் ஸ்கேன் மூலம் மக்களை பரிசோதித்த பின்பே அனுமதிக்க வேண்டும்.
மத்திய அரசின் அறிவுறுத்தல்படி வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு தடை இல்லை. அவர்கள் முழுமையாக பரிசோதனைக்கு பின்பு உள்ளே அனுமதிக்கப்படுவர். மத்திய அரசுக்கு இதுவரை பல்வேறு கோரிக்கைகள் வைத்து 17 கடிதம் எழுதி உள்ளேன். கோரிக்கைகளுக்கு பதில் எதுவும் தரவில்லை. ஆனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னுடைய கோரிக்கையை ஏற்று மேலும் ஐந்து மாதங்களுக்கு இலவச அரிசி, பருப்பு வழங்கப்படும் என அறிவித்த பிரதமருக்கு நன்றி கூறியுள்ளார்.
மேலும், உயர்ந்து வரும் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் உயர்வுகளிலிருந்து தொழிலாளர்கள், பொதுமக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசு மாதம் ரூபாய் 5 ஆயிரம் வழங்க வேண்டும். கடந்த நான்கு மாதங்களாக புதுச்சேரியின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, மாநில அரசுக்கு உதவும் ஒரு நிலையை உருவாக்க முன்வரவேண்டும்" எனவும் தனது வீடியோ பதிவு மூலம் புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார்.