இந்தியாவில் ஜனவரி 16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், தற்போது அது படிப்படியாக நீட்டிக்கப்பட்டு 18 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதினர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் எனவும் மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்தநிலையில் கர்ப்பிணி பெண்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அறிவித்துள்ளது. நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரையை ஏற்று மத்திய சுகாதாரத்துறை இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
கோ-வின் செயலில் பதிவு செய்தோ அல்லது அருகில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்றோ கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களோடு பகிர்ந்து கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளது.