பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கடந்த 16 நாட்களில் முறையே லிட்டருக்கு ரூ.8.30 பைசாவும், ரூ.9.46 பைசாவும் அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி, கடந்த 16 நாட்களாக நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை உயர்த்தி வருகின்றன எண்ணெய் நிறுவனங்கள். அதன்படி, கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கடந்த 16 நாட்களில் முறையே லிட்டருக்கு ரூ.8.30 பைசாவும், ரூ.9.46 பைசாவும் அதிகரித்துள்ளது. இரு வாரங்களுக்கு ஒருமுறை எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யலாம் என்ற விதிமுறைகள் இருந்த போது, கடந்த 2002 ஆம் ஆண்டு இதுபோன்ற ஒரு விலை உயர்வை இந்தியா சந்தித்தது. அதன்பிறகு, இரண்டு வார காலகட்டத்தில் தற்போது ஏற்பட்டு விலை உயர்வே அதிகபட்சம் ஆகும். சென்னையைப் பொறுத்தவரை இன்று, பெட்ரோல் 29 காசு உயர்ந்து லிட்டர் ரூபாய் 82.87-க்கும், டீசல் 50 காசு உயர்ந்து லிட்டர் ரூபாய் 76.30- க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.