புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக நான்காவது முறையாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் என். ரங்கசாமி பதவியேற்றுக்கொண்டார். இன்று (07/05/2021) பிற்பகல் துணைநிலை ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில், என். ரங்கசாமிக்கு தெலங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநருமான (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
இந்த விழாவில், பாஜகவின் பொதுச்செயலாளர் சி.டி. ரவி, மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக பாஜக தலைவர் எல். முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் புதுச்சேரியில் உள்ள தலைமைச் செயலகத்துக்குச் சென்ற முதலமைச்சர் ரங்கசாமி, முதலமைச்சர் அறைக்குச் சென்று மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். அவை எந்தெந்த கோப்புகள் என்பது குறித்து பார்ப்போம். நிலுவையில் உள்ள இரண்டு மாதத்துக்கான இலவச ரேஷன் வழங்குவதற்கான கோப்பிலும், முதியோர், விதவைகள் உள்ளிட்ட 10 ஆயிரம் பேருக்குப் பென்சன் வழங்க வகைச் செய்யும் கோப்பிலும், உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு சென்டாக் உதவித்தொகை வழங்கும் கோப்பிலும் கையெழுத்திட்டுள்ளார்.
புதுச்சேரியின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட ரங்கசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.