குவாட் அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றுள்ளார்.
ஜப்பான் பிரதமர் அழைப்பின் பேரில், அந்நாட்டின் தலைநகர் டோக்கியோவிற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு இன்றும், நாளையும் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவிருக்கிறார். இதற்காக, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் டோக்கியோ சென்ற பிரதமருக்கு, ஜப்பான் வாழ் இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, பதாகைகளுடன் தன்னை வரவேற்ற சிறுவர், சிறுமிகளை வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, 'தமிழில் வணக்கம்' என்று பதாகை வைத்திருந்த சிறுவனைக் கண்டு உற்சாகமாகி, பதாகையில் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். மேலும், சிறுவர், சிறுமிகளை கை குலுக்கி உற்சாகப்படுத்தினார்.
ஜப்பானில் நடைபெறவிருக்கும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றிருக்கும் குவாட் அமைப்பின் இரண்டாவது உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி , இந்தியா, ஜப்பான் மற்றும் உலகளாவிய கூட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்துவதை தான் எதிர்நோக்கியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சர்வதேச பிரச்சனைகள் தொடர்பாக, விவாதிக்க இந்த பயணம் நல்ல வாய்ப்பாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜப்பான் பயணத்தின் போது, ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட அந்தோணி நார்மன் ஆல்பனீஸ் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோரைத் தனித்தனியே சந்திக்கவுள்ளார் பிரதமர்.