மத்திய பிரதேச மாநிலத்தின் இன்டோர் பகுதியில் 27 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் அமேசான் நிறுவனத்தை ரூ.30 இலட்சம் வரை ஏமாற்றியுள்ளார். சில நாட்களாக இன்டோர் பகுதியில் குறிப்பிட்ட சில இடங்களுக்கு அனுப்பப்படும் பார்சல்கள், வாடிக்கையாளர்களிடம் சென்று சேரும்போது காலியாக வருகிறது என அமேசான் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள்வர, அமேசான் நிறுவனம் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
அதனை தொடர்ந்து விசாரணையை தொடர்ந்த போலீஸுக்கு அதிர்ச்சியூட்டும் சில தகவல்கள் கிடைத்தது. இறுதியாக இந்த நபர்தான் இவ்வளவு தொகையை ஏமாற்றியுள்ளார் என உறுதி செய்து அவரை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் எப்படி இந்த திருட்டு அருங்கேற்றப்பட்டது என்பது தெரியவந்தது.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அவருடன் சில நண்பர்களை சேர்த்துக்கொண்டு சில போலியான மெயில் ஐடி-களை உருவாக்கி அதன் வழியாக பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசன் நிறுவனத்தில் விலை உயர்ந்த பொருள்களை ஆர்டர் செய்துள்ளார். மேலும் இதற்காக போலியான வெவ்வேறு செல்ஃபோன் எண்களையும் உபயோகித்துள்ளார். குறிப்பாக அவர்கள் மாட்டிக்கொள்ளக்கூடாதென அங்குள்ள சில பெரு நிறுவனங்களின் பெயர்களை உபயோகித்துள்ளனர்.
இந்த கும்பல் முதலில் தேவையான பொருட்களை போலியான மெயில் ஐடி, ஃபோன் நம்பர்கள், பெரும் நிறுவனத்தின் பெயர்களை வைத்து ஆர்டர் செய்துவிட்டு, அமேசான் நிறுவனத்திடம் இருந்து அதற்கான விலையை கொடுத்து அந்த பொருட்களை வாங்கியிருக்கிறது.
அதன்பின் அதனை அருகில் உள்ள சிறு கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளனர். அதன் பிறகு அமேசான் நிறுவனத்திடம் தாங்கள் ஆர்டர் செய்து பொருளின் பாசல் காலியாக தங்களிடம் வந்ததாக தெரிவித்து அவர்கள் ஆர்டர் செய்த பொருளுக்கான பணத்தையும் அமேசான் நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளனர். இதுபோல் இது வரை ரூ. 30 இலட்சம் வரை இந்த கும்பல் ஏமாற்றியுள்ளது.