Skip to main content

குண்டு வெடிப்பு சம்பவம்; மக்களிடம் கோரிக்கை வைத்த என்.ஐ.ஏ.

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
The NIA made a request to the people at bangalore hotel incident

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகத்தில் கடந்த 1 ஆம் தேதி பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் குண்டு வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் உணவகத்தில் தீ மளமளவெனப் பரவி பலர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் சிக்கியவர்களை மீட்டனர். இந்த வெடி விபத்தில் மொத்தம் 10 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அந்த காட்சிகளின் அடிப்படையில் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த நபர் எந்த பகுதிகளுக்கு சென்றாரோ அந்தந்த பகுதிகளில் உள்ள இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து, பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேயில் வெடிகுண்டு வைத்தவர் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ. 10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் எனத் தேசியப் புலனாய்வு முகமை அறிவித்தது. இதற்கிடையே, இந்த வெடிகுண்டு சம்பவத்தின் கீழ் கிடைத்த தகவலின் அடிப்படையில், பயங்கரவாதிகள் 3 பேரை என்.ஐ.ஏ கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

The NIA made a request to the people at bangalore hotel incident

இந்த நிலையில், குண்டு வெடிப்பு சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் புதிய புகைப்படங்களை என்.ஐ.ஏ வெளியிட்டு, மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பெங்களூரு 'ராமேஸ்வரம் கஃபே' குண்டு வெடிப்பில் சந்தேகிக்கப்படும் நபரை அடையாளம் காண மக்களின் ஒத்துழைப்பு தேவை. அதனால், மேற்கண்ட புகைப்படத்தில் உள்ள நபர் குறித்த தகவல் தெரிந்தால் 08029510900, 8904241100 ஆகிய எண்களில் அழைக்கலாம். info.blr.nia@gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். உங்கள் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும்’ என்று தெரிவித்து குண்டு வெடிப்பில் சந்தேகிக்கப்படும் நபரின் புதிய புகைப்படங்களை வெளியிட்டு தேசியப் புலனாய்வு முகமை கோரிக்கை வைத்துள்ளது. 

சார்ந்த செய்திகள்