தமிழகத்தில் ஜல்லிக்கட்டுபோல கர்நாடகாவில் நடைபெறும் கம்பாளா ஓட்டப்பந்தயத்தில் கிட்டத்தட்ட 143 மீட்டர் தூரத்தை தனது எருதுகளுடன் ஸ்ரீனிவாசகவுடா என்ற இளைஞர் கடந்துள்ளார். தனது மாடுகள் சேற்றில் ஓடும்போது, அதன் கயிறுகளை பிடித்தபடி, அதன் பின் அந்த விளையாட்டில் பங்குபெறும் வீரர்களும் ஓட வேண்டும். அந்த சேறு நிறைந்த பாதையில் ஸ்ரீனிவாசகவுடா, 142.5 மீட்டரை வெறும் 13.62 நொடிகளில் ஓடிக்கடந்து வெற்றி பெற்றார்.
இந்த கணக்கின்படி 100 மீட்டர் தூரத்தை கடக்க அவர் வெறும் 9.55 வினாடிகளே எடுத்துக்கொண்டுள்ளார். உசைன் போல்டின் 100 மீட்டர் உலக சாதனை 9.58 வினாடிகள் ஆகும். இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவிய சூழலில், இது போன்ற வீரர்களை அரசு சரியாக அடையாளம் கண்டு முறையான பயிற்சி வழங்கினால் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா நிறைய பதக்கங்களை குவிக்கும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இதன் பின்பு உசைன் போல்டை விட வேகமாக ஓடிய கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் ஸ்ரீனிவாசகவுடா பயிற்சியளிப்பதற்கான உதவிகள் செய்யப்படும் என மத்திய விளையாட்டுத்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீனிவாசகவுடா, ஓட்டப்பந்தயம் வேறு கம்பாலாவில் ஓடுவது வேறு. எனக்கு இந்தப் போட்டி தான் பிடித்திருக்கிறது. நான் எந்த பயிற்சியிலும் பங்கேற்கப் போவதில்லை. தொடர்ச்சியாக மார்ச் 10ஆம் தேதி வரை பல போட்டிகளில் நான் பிஸியாக இருப்பேன். இது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது என்பதால் இதனை தவிர்த்து விட்டு பயிற்சிக்கு என்னால் செல்ல முடியாது. எனவே நான் அமைச்சரின் கோரிக்கையை ஏற்கவில்லை என்று தெரிவித்தார்.