டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சி எம்.பியுமான ஸ்வாதி மாலிவால், போலீசாரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இது தொடர்பாக கடந்த 13ஆம் தேதி காலை ஸ்வாதி மாலிவால் போலீசாரை தொடர்புகொண்டு, ‘டெல்லி முதல்வர் இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளரால் தாக்கப்பட்டேன்’ எனப் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.
அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், போலீசார் உடனடியாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தை அடைந்த போது அங்கு எம்.பி.ஸ்வாதி மாலிவால் இல்லை என்று கூறப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதற்கு பா.ஜ.கவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளரால், தான் தாக்கப்பட்டதாக போலீசாரிடம் கூறிய ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மாலிவால், இந்தச் சம்பவம் குறித்து போலீசாரிடம் எந்தவித புகாரும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று (16-05-24) உத்தரப் பிரதேசத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் ஆம் ஆத்மி பெண் எம்.பி ஸ்வாதி மாலிவால் வைத்திருந்த குற்றச்சாட்டு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இங்கே இரண்டு பிரச்சினைகள் உள்ளன. எந்த ஒரு பெண்ணுக்கு எங்கு கொடுமை நடந்தாலும் சரி, நாங்கள் அந்த பெண்ணுடன் துணையாக நிற்போம். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், நான், எப்போதும் பெண்களுடன் ஆதரவாக நிற்கிறேன். மேலும், ஆம் ஆத்மி கட்சி தங்களுக்குள் விவாதித்து முடிவெடுக்கும். அது அவர்களைப் பொறுத்தது” எனக் கூறினார்.