தனது பதவிக்காலம் இன்றுடன் (24/07/2022) நிறைவடையும் நிலையில், நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைக்காட்சி வாயிலாக இன்று (24/07/2022) இரவு 07.00 மணிக்கு உரையாற்றினார்.
அப்போது குடியரசுத் தலைவர் கூறியதாவது, "உங்களிடம் சில விஷயங்களை பேச விரும்புகிறேன். நாடு முழுவதும் செய்த பயணத்தால், மக்களிடம் உரையாட வாய்ப்பு கிடைத்தது. நாட்டு மக்கள் அனைவரும் நல்ல ஒத்துழைப்பு அளித்தீர்கள். மக்கள் பிரதிநிதிகள் மூலம் என்னை இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தீர்கள். அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சாதாரண குடும்பத்தில் பிறந்த தனக்கு நாட்டிற்கு சேவைப்புரிய வாய்ப்பு கிடைத்தது ஜனநாயகத்தின் சிறப்பு. இளைஞர்கள் தங்களின் கிராமங்கள், பயின்ற பள்ளிகள் ஆகியவற்றுடன் தொடர்பில் இருக்க வேண்டும். சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் பங்களிப்பு சிறப்பானது. எந்தவித பேதமும் இன்றி அனைவருக்கும் அடிப்படை வசதி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள்.
21- ஆம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற நாடு தயாராகி வருகிறது என்பதை உறுதியாக நம்புகிறேன். குடிமக்களே இந்த நாட்டின் உண்மையான தூண்" எனத் தெரிவித்தார்.