இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கவுதம் கம்பீர் டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 6,96,156 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் இன்று மாலை 5.30 மணியளவில் டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாய கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் குழு கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சரவையின் இடம் பெற்றுள்ள எம்.பிக்களின் உத்தேச பட்டியல் வெளியாக அதிக வாய்ப்பு. அதில் கூட்டணி கட்சிகளின் எம்.பிக்களுக்கு எந்தெந்த இலாக்கா ஒதுக்கலாம் என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து பாஜக கட்சியின் மூத்த தலைவர்களுடன் சென்று குடியரசுத்தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் நரேந்திர மோடி. இந்த பட்டியலில் கம்பீருக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் பாஜக கட்சி தனித்து 303 இடங்களில் வெற்றி. அதே போல் கூட்டணியுடன் 351 இடங்களில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் கூட்டணி தனித்து 52 இடங்களில் வெற்றியும், கூட்டணியுடன் 90 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.