கரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக, விண்வெளிக்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் ககன்யான் திட்டம் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் முடங்கியுள்ள நிலையில், இதன் பாதிப்பு இஸ்ரோவின் எதிர்கால திட்டங்களிலும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. கரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பணி முடக்கம், நிதிப் பற்றாக்குறை காரணமாக இஸ்ரோவின் மிகமுக்கியத் திட்டங்களில் ஒன்றான ககன்யான் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் கடுமையாகக் கவனம் செலுத்திவரும் இந்தியா, அதற்கான முன்னோட்டமாக இந்த ஆண்டுக்குள் ரோபோவுடன் கூடிய ஆளில்லாத விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்யத் திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது கரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பால் இஸ்ரோவின் இந்தத் திட்டம் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ அமைப்பின் மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், "எங்களுக்கு வழங்கப்படும் திட்டங்களின்படி, ககன்யான் ஆளில்லா விமானம் இந்த ஆண்டின் அட்டவணையில் இல்லை. அதற்குப் பதிலாக மற்ற செயற்கைக்கோள் ஏவுதல்களில் கவனம் செலுத்தப்படுகிறது. ஆளில்லா விண்கலம் ஏவுதல் தள்ளிவைக்கப்படுவதால், 2022 ஆம் ஆண்டு மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் மாற்றியமைக்கப்படலாம்" எனத் தெரிவித்துள்ளார்.