குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்தும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நாடு முழுவதும் பல பகுதிகளில் வன்முறையும் நடந்தது. இதனையடுத்து பல மாநிலங்களில் இணைய சேவை முடக்கப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் முதல்வர்கள் மற்றும் ராகுல் காந்தி போன்றோர் இந்த போராட்டங்களில் பெரிய அளவு தீவிரம் காட்டவில்லை என பிரசாந்த் கிஷோர் ஏற்கனவே விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்த அவரது புதிய ட்வீட் ஒன்றில், "குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் இறுதியாக ராகுல் காந்தி கலந்து கொண்டு விட்டார். இதற்காக அவருக்கு நான் நன்றியை கூறிக் கொள்கிறேன். அதேசமயம் குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என ராகுல் காந்தி அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். மாநில முதல்வர்கள் அறிவித்து விட்டார்கள் என காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகின்றனர். ஆனால் இதனை காங்கிரஸ் தலைமை அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். இந்த விஷயத்தில் அக்கட்சி மக்களை குழப்பக் கூடாது" என கூறியுள்ளார்.