கர்நாடகாவில் ஆளும் கட்சியை சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள், ஆட்சியின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் மும்பையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினர். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவால் ஆளும் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.க கூட்டணி அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முன்னாள் முதல்வர் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டார். இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தை கொண்டு வந்தார் குமாரசாமி. இது தொடர்பான நீண்ட விவாதத்திற்கு பிறகு, நேற்று மாலை 07.30 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் ஆட்சிக்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இதனால் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.க கூட்டணி அரசு கவிழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக ஆளுநர் வஜூபாய் வாலாவை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார் குமாரசாமி. இதனை ஏற்ற ஆளுநர், குமாரசாமியின் ராஜினாமா கடிதத்தை ஏற்கப்பட்டதாக அறிவித்தார். கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்ந்ததை அடுத்து, கர்நாடக பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா, பெங்களுருவில் உள்ள ரமடா ஹோட்டலில் பாஜக எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை செய்தார்.
இந்நிலையில் மீண்டும் இன்றைய காலை 11.00 மணியளவில், பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என எடியூரப்பா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இன்றைய கூட்டத்தில் சட்டப்பேரவை குழு தலைவரை தேர்ந்தெடுத்து, ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைக்கோர உள்ளதாக தெரிவித்தார். அதே போல் கர்நாடகாவின் அடுத்த முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பட்டியல் பாஜக தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து ஆலோசனை செய்த, பிறகே முதல்வர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றார்.
பாஜக ஆட்சி அமைப்பதை தொடர்ந்து, பெங்களுருவில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்ற ஹோட்டலில், வண்ணமிகு வாணவேடிக்கை பட்டாசுகளை பாஜகவினர் வெடித்தனர். கர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பாவை தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
#WATCH: Fire works outside Ramada Hotel in Bengaluru where Bharatiya Janata Party (BJP) Legislature Party meeting is underway. HD Kumaraswamy led Congress-JD(S) government lost trust vote in the assembly, today. #Karnataka pic.twitter.com/D7dCyPeTv0
— ANI (@ANI) July 23, 2019