முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க்கு (92) உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்று (26.12.2024) மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்சினையால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இந்தியாவில் உள்ள பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், டெல்லியில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், இன்று (27-12-24) காலை பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர், மன்மோகன் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பிறகு, மன்மோகன் சிங் குறித்து பேசி பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பிரதமர் மோடி பேசியிருப்பதாவது, “முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு, நாம் அனைவரையும் மிகுந்த வருத்தத்தில் உள்ளாக்கியுள்ளது. அவரது மறைவு ஒட்டுமொத்த தேசத்திற்கே பின்னடைவாகும். போராட்டங்களை தாண்டி எப்படி உயர்ந்து உயர முடியும் என்பதற்கு அவரது வாழ்க்கை, எதிர்கால சந்ததியினருக்கு ஒரு உதாரணமாக இருக்கிறது. நேர்மையான மனிதராகவும், சிறந்த பொருளாதார நிபுணராகவும், சீர்திருத்தங்களுக்காக தன்னை அர்ப்பணித்த தலைவராகவும் அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். ஒரு பொருளாதார நிபுணராக, அவர் நாட்டுக்கு பல சேவைகளை வழங்கினார். சவாலான நேரத்தில், ரிசர்வ் வங்கி ஆளுநராகப் பணியாற்றியவர். முன்னாள் பிரதமர் பாரத ரத்னா பி.வி.நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தபோது, பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருந்த நாட்டிற்கு, பொருளாதாரத்தில் புதிய திசையை ஏற்படுத்தினார்.
எம்.பியாக இருந்தபோது அவரது செயல்பாடு அனைவருக்கும் உத்வேகமாக இருந்தது. முக்கியமான விவாதங்களில், சக்கர நாற்காலியில் நாடாளுமன்றத்துக்கு வந்து எம்.பி.யாக கடமையாற்றினார். பல்வேறு கட்சித் தலைவர்களுடன் தனது உறவை எப்போதும் கடைப்பிடித்து, அனைவருக்கும் எப்போதும் அணுகக் கூடியவராக இருந்தார். நான் முதலமைச்சராக இருந்தபோது, பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச தலைப்புகளில் விவாதித்தேன். எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன், நாட்டின் ஒவ்வொரு குடிமகன் சார்பாகவும், டாக்டர் மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.