உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், இந்த பள்ளியில் படிக்கும் 9 வயது சிறுவனின் உடல், அப்பள்ளி தலைமை ஆசிரியருடைய காரில் கிடந்ததை கண்டு அங்குள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட அனைவரிடம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், எந்தவித தகவலும் கிடைக்காத காரணத்தினால், பள்ளியில் பயின்று வரும் மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், 13 வயது மாணவர் ஒருவர் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தார். அதில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. பள்ளிக்கு விடுமுறை விட வேண்டும் என்பதற்காக 9 வயது சிறுவனை, அந்த மாணவன் துண்டை வைத்து கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரிந்தது.
இதனை தொடர்ந்து, மாணவன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் நடந்த சம்பவத்தை போலீசார் உறுதி செய்தனர். அதன் பின்னர், அந்த மாணவரை போலீசார் கைது செய்து சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்துள்ளனர். பள்ளிக்கு விடுமுறை விட வேண்டும் என்பதற்காக பள்ளியில் படிக்கும் சக மாணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.