மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கரோனா சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் சேராமல் தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளது ஏன் எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.,
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அமித்ஷா. இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சேராமல், தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைபெற்று வருவது தொடர்பாக அமித்ஷாவுக்குக் கேள்வியெழுப்பி உள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர்.
இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "உண்மையில், ஏன் நம்முடைய உள்துறை அமைச்சர் கரோனாவில் பாதிக்கப்பட்டபோது, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல், அடுத்த மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுகிறார் என்பது வியப்பாக உள்ளது. மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த நினைத்தால், எய்ம்ஸ் போன்ற பொது நிறுவனங்களுக்கு அரசின் உயர்ந்த பதவிகளில் இருப்போர் ஆதரவு அளிப்பது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.