இந்திய அளவில் அரசியல் கட்சிகளுக்கு ஆலோசகராக இருந்து, அவர்களின் கட்சியைத் தேர்தலில் வெற்றிபெற வைக்கும் வியூக வகுப்பாளராக அறியப்படுபவர் பிரசாந்த் கிஷோர். இதற்காக, ஐ-பேக் என்கிற தேர்தல் வியூகங்களை வகுக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களின் தேர்தலில், தமிழகத்தில் திமுகவிற்கும், மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸிற்கும் தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றினார். இந்தத் தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் வியூகம் வகுக்கும் பணியிலிருந்து விலகப்போவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "நான் தேர்தல் வியூக வகுப்பாளர் பணியிலிருந்தும், ஐ-பேக்கிலிருந்தும் விலகப்போகிறேன். நான் எனது வாழ்க்கையில் வேறொன்றை செய்ய விரும்புகிறேன். ஐ-பேக்கை எனது சக ஊழியர்கள் வழிநடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது" என தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் கிஷோர், மேற்கு வங்கத்தில் பாஜக 100 தொகுதிகளை வென்றால் தேர்தல் வியூக வகுப்பாளர் பணியிலிருந்து விலகிவிடுவதாக அறிவித்திருந்தார். தற்போது பாஜக வெறும் 85 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வரும் நிலையில், பிரசாந்த் கிஷோரின் விலகல் முடிவு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.