பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளுங்கட்சியான காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முயன்று வருகிறது. நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறி வரும்நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் இறங்கியுள்ளது.
பஞ்சாபில் மொத்தம் 117 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், 100 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை வரும் 21 ஆம் தேதிக்குள் அறிவிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில், ஒர் குடும்பம் ஒரு சீட் என்ற விதியை அமல்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்ற விதியை கடுமையாக கடைபிடிக்க கட்சி முடிவு செய்துள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே காங்கிரஸ் கட்சி சில எம்.பிக்களையும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.