வழக்குகளில் கைப்பற்றப்பட்டு காலாவதியான வாகனங்கள் ஒருபக்கம், இப்போது உபயோகிக்கும் வாகனங்கள் மறு பக்கம் என, நம்ம ஊர் காவல் நிலையங்களை பார்த்து பழகியவர்களுக்கு கேரள மாநிலத்தில் உள்ள ஒரு காவல் நிலையம் சற்று வித்தியாசமாகத் தான் இருக்கும்.
மலப்புரம் மாவட்டம் சங்கரம்குளம் காவல் நிலையத்தை பார்த்தால் ஒரு காய்கறித் தோட்டத்திற்குள் நுழைந்த அனுபவம் கிடைக்கும். ஒரு பக்கம் மீன்குட்டை, மறுபக்கம் காய்கறி தோட்டம். இன்னொரு பக்கம் பூத்துக்குலுங்கும் மலர்கள் என விழிகளை விரிய வைக்கின்றன. அங்கு முன்பு காவல் உதவி ஆய்வாளராக இருந்த ஆல்பர்ட், காவல் நிலையத்திற்கு அருகிலேயே 2 குளங்களை வெட்டி அதில் மீன்பண்ணை அமைத்திருக்கிறார். குளத்தில் மீன்கள் துள்ளி விளையாடுவதும், அல்லி மலர்கள் பூத்துக் குலுங்குவதும் பார்வையாளர்களை வசீகரிக்கிறது.
இன்னொரு பக்கம் காய்கறி தோட்டத்தையும் அமைத்திருக்கிறார் ஆல்பர்ட். அவர், வேறு காவல் நிலையத்திற்கு மாறி சென்றாலும், இந்த காவல் நிலையம் அருகே குடியிருப்பு இருப்பதால், காய்கறித் தோட்டத்தை அவரது மனைவி பீனா கவனித்து வருகிறார். மணல் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட லாரி நீண்ட காலமாக சங்கரம் குளம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் பாடியில் பிளாஸ்டிக் தார்ப்பாய் போட்டு, அதனையே குளமாக மாற்றி அதில் வண்ண மீன்கள் வளர்த்து வந்துள்ளனர். ஆனால், அந்த லாரியை அண்மையில் ஏலம் விட்டதால், ஸ்டேசனுக்கு அருகேயே மீன்பண்ணையை ஏற்படுத்தி இருக்கிறார் ஆல்பர்ட்.
இதுதொடர்பாக ஆல்பர்ட்டை தொடர்பு கொண்டு பேசினோம். "சங்கரம்குளம் என்ற ஊர் பெயரிலேயே 'குளம்' இருக்கும்போது, காவல் நிலையத்தில் இருப்பது தப்பு இல்லையே என்றவர். இயற்கை விவசாயத்தை நான் தொடங்கியுள்ளேன். மற்றவர்களும் பின்பற்றும்போது மிகப்பெரிய வெற்றியடையும் என நம்புகிறேன்”என்றார்.