இமாச்சல பிரதேச மாநிலம், சிம்லாவில் நேற்று (17.11.2021) 82வது அகில இந்திய சட்ட பேரவைத் தலைவா்களின் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஒரே நாடு ஒரே சட்டபேரவை நடைமுறை வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது, “ஆரோக்கியமான விவாதங்கள் நடத்துவதற்கு தனி நேரம் ஒதுக்கப்பட வேண்டும். இது செய்யப்பட்டால், அது பேரவையின் மிகவும் ஆரோக்கியமான நேரமாகவும், ஆரோக்கியமான நாளாகவும் இருக்கும்.
சமூகத்திற்குத் தனித்துவமான ஒன்றினை செய்யும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அதைப் பேரவையில் பகிர்ந்துகொள்வதற்கு 3 - 4 நாட்கள் ஒதுக்கப்பட வேண்டும். அந்த அனுபவங்கள் மற்ற பிரதிநிதிகளுக்கு ஒரு கற்றல் அனுபவமாக இருக்கும். ஒரே நாடு, ஒரே சட்டப்பேரவை நடைமுறை கொண்டுவரப்பட வேண்டும். இது நாடாளுமன்ற நடைமுறைக்குத் தொழில்நுட்ப உத்வேகத்தை அளிக்கும் என்பதுடன், நாட்டின் அனைத்து மாநில சட்டமன்றங்களையும் இணைக்க உதவும்.
நமது அவையின் மரபுகளும் நடைமுறைகளும் இந்தியர் என்ற இயல்புடன் இருக்க வேண்டும். நமது கொள்கைகள் மற்றும் சட்டங்கள் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உறுதியுடன் இந்திய உணர்வை வலுப்படுத்த வேண்டும்.” இவ்வாறு மோடி தெரிவித்தார்.