Skip to main content

20 முதல்வர்களை பார்த்த கர்நாடகா... 3 பேர் மட்டுமே பதவியை நிறைவு செய்த அவலம்!

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

சுதந்திர இந்தியா வரலாற்றில் வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத அரசியல் அதிசயங்கள் கர்நாடகத்தில் மட்டும் எளிதாக நடக்கும். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பெரும்பாலான தேர்தல்களில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சனத்தை முன் வைப்பார்கள். தேர்தல் முடிவுக்கு பிறகு இரண்டு தரப்பினரும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பார்கள். அதுவும் சில ஆண்டுகள் கூட நிலைக்காது. குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும். மீண்டும் தேர்தல் வரும், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது, மீண்டும் பெரும்பான்மைக்காக கட்சிகள் போராடும். இது கடந்த பல ஆண்டுகளாக கர்நாடகத்தில் நடக்கும்  அரசியல் கேலிக் கூத்துக்கள். குறிப்பிட்டுசொல்ல வேண்டுமானால் இந்த 70 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் மூன்று முதல்வர்கள் மட்டுமே கர்நாடகத்தின் முதல்வராக தங்களுடைய பதவியினை முழுமையாக நிறைவு செய்தவர்கள்.
 

 karnataka political issue


அந்த வகையில், ஹனுமந்தையா தொடங்கி குமாரசாமி வரை சுமார் 20-க்கும் அதிகமானவர்கள் கர்நாடக முதல்வராக இருந்துள்ளனர். 1952-ல் மைசூர் மாகாணத்தின் முதல்வராக இருந்த ஹனுமந்தையா 4 ஆண்டுகள் 142 நாட்கள் பதவியில் இருந்தார். அதனை தொடர்ந்து முதல்வராக இருந்த எஸ்.ஆர். பொம்மை, வீரேந்திர பாட்டீல், பங்காரப்பா, வீரப்ப மொய்லி, தேவகவுடா, ஜே.எச். பாட்டீல், எஸ்.எம். கிருஷ்ணா, தரம்சிங், குமாரசாமி, எடியூரப்பா,சதானந்தா கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் என எந்த முதல்வருமே முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்யவில்லை. சித்தராமையா 2013 முதல் 2018-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளும் முதல்வராக இருந்தார். அதற்கு முன்னர் நிஜலிங்கப்பா மற்றும் தேவராஜ் அர்ஸ் ஆகிய இருவரும் கர்நாடக முதல்வராக தங்களுடைய முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்தனர். இதில் என்ன வியப்பு என்றால், தற்போது முதல்வராக பதவி ஏற்க முயலும் எடியூரப்பா கூட, இந்த அரசின் முழு பதவிகாலம் வரை பதவியில் இருந்தாலும் 4 ஆண்டுகளுக்கும் குறைவான வருடங்களே முதல்வராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

சார்ந்த செய்திகள்