உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், அடுத்தாண்டு தொடக்கத்தில் அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஓய்வுபெற்ற ராணுவ வீரரான கர்னல் அஜய் கோதியால் என்பவரை அம்மாநிலத்திற்கான ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.
ஓய்வுபெற்ற ராணுவ வீரரான கர்னல் அஜய் கோதியால், உத்தரகாசியில் அமைந்துள்ள நேரு மலையேறுதல் நிறுவனத்தின் முதல்வரா இருந்தவர். தற்போது இளைஞர்களை ராணுவத்திற்கு தயார்ப்படுத்தும் பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் மாதம்தான் ஆம் ஆத்மியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜய் கோதியாலை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், "நாங்கள் ஆட்சி வந்தால், உத்தரகாண்ட்டை இந்துக்களுக்கான உலகளாவிய ஆன்மிக தலைநகரமாக மாற்றுவோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம். 10 மடங்கு அதிக பக்தர்கள் வரும் வகையில் இந்த தெய்வபூமியை (உத்தரகாண்ட்) மேம்படுத்துவோம். மாநிலத்தின் தலைவர்கள் தெய்வபூமியை கொள்ளையடித்தபோது, அஜய் கோதியால் எல்லையில் நாட்டை பாதுகாத்துக் கொண்டிருந்தார். உத்தரகண்ட் மக்களுக்கு இதுபோன்ற, தனது வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாமல் சேவை செய்யும் ஒரு தேசபக்தர்தான் தேவை" என கூறியுள்ளார்.