சர்ச்சைக்குரிய சாமியார் அசராம் பாபுவுக்கு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கி ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சர்ச்சைக்குரிய சாமியார் அசராம் பாபுவிற்கு சொந்தமாக, ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு உ.பி. ஷாஜகான்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது பெற்றோர் படிப்பதற்காக சேர்த்துவிட்டனர். இந்த சிறுமியை பேய் ஓட்டுவதாகக் கூறி அசராம் பாபு உள்ளிட்டோர் பாலியல் வன்புணர்வு செய்ததாக வழக்கு தொடரப்பட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த ஜோத்பூர் எஸ்.இ/எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி மதுசூதனன், பாதுகாப்பு காரணங்களால் அசராம் பாபு இருந்த சிறைக்கே சென்று அசராம் பாபு மற்றும் அவரது கூட்டாளிகளான ஹில்பி, சரத் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். குற்றவாளிகளான இம்மூவரில் அசராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனையும், ஹில்பி மற்றும் சரத் ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.