மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஒன்பது கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தாலும், இதுவரை எந்த உடன்படும் ஏற்படவில்லை.
இதையடுத்து, குடியரசுத்தினத்தன்று மாபெரும் டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர். இந்தப் பேரணியை தடைசெய்யக் கோரி மத்திய அரசின் கீழ் இயங்கும் டெல்லி காவல்துறை, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, 18.01.2021 அன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லிக்குள் நுழைவது என்பது சட்ட ஒழுங்கு தொடர்பான விவகாரம் என்றும், அதுகுறித்து காவல்துறைதான் முடிவெடுக்க வேண்டும் எனக்கூறி மனு மீதான விசாரணையை ஜனவரி 20ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தது.
இந்நிலையில் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது, “உடனடியாக இந்த வழக்கை விசாரிக்க வேண்டும். மிகவும் குறைவான நாட்கள்தான் இருக்கிறது. சரியான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்” என்று மத்திய அரசின் வழக்கறிஞர் கே.கே.வேனுகோபால் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “ஒரு போராட்டம் நடத்தலாமா நடத்த வேண்டாமா, அனுமதி அளிக்கலாமா அளிக்கக்கூடாத என சட்ட ஒழுங்கைக் கண்காணிக்கக் கூடிய நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதனையும் நீதிமன்றத்தையே செய்ய சொன்னால் எப்படி?” என கேள்வி எழுப்பி, அந்த மனுவை உடனடியாக திரும்பப் பெற அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் இந்த மனு மீது எந்த உத்தரவையும் நாங்கள் பிறப்பிக்க மாட்டோம். எனத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.