![Perarivalan's release case - Judgment this morning!](http://image.nakkheeran.in/cdn/farfuture/TCX7l4Zhqn--UzmS4UC97mFw3I6ItwIEF7Iap9D61Bg/1652842577/sites/default/files/inline-images/tryry7575_0.jpg)
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன் தன்னை விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜரான மத்திய மற்றும் மாநில அரசுகளின் தலைமை வழக்கறிஞர்கள் காரசார வாதங்களை முன் வைத்தனர்.
இதனிடையே, பேரறிவாளன் வழக்கு தொடர்பாக, தமிழக அரசு சார்பில் எழுத்துப்பூர்வமான வாதங்களை நேற்று (17/05/2022) தாக்கல் செய்தது. அதில், பேரறிவாளனை விடுதலை செய்வதற்கான உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். ஆளுநரின் சிறப்பு அதிகாரமான 161-ன் கீழ் முடிவெடுக்க எந்த தடையும் இல்லை. பேரறிவாளன் வழக்கில் விசாரணை வரம்பு தமிழக எல்லையில் உள்ளதால் முடிவெடுக்க வேண்டிய அதிகாரமும் மாநில அரசுக்கே உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று (18/05/2022) காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளிக்கிறது. அமைச்சரவையின் தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்காதது பற்றி நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த நிலையில் இந்த தீர்ப்பு அனைத்து தரப்பினராலும் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற ஒன்றாக இருக்கிறது.