இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுகேட்கப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், 3 எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இருவர், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் என 300க்கும் மேற்பட்டோரின் தொலைபேசி எண்கள் பெகாசஸ் மூலம் ஹேக் செய்யப்பட்டன அல்லது ஹேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என இந்த பெகாசஸ் ஹேக்கிங் குறித்து 'பெகாசஸ் ப்ராஜெக்ட்' என்ற பெயரில் ஆய்வு செய்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இது பெரும் சர்ச்சையானது. இந்தியாவில் நாடாளுமன்றத்திலும் பெகாசஸ் விவகாரம் எதிரொலித்தது. இதனையடுத்து இதுகுறித்து மக்களவையில் விளக்கமளித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பெகாசஸ் மூலம் யாரும் உளவு பார்க்கப்படவில்லை என தெரிவித்தார். இருப்பினும் இதனை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதன்பிறகு நடந்த அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில் இன்று (20.07.2021) காலை 11 மணிக்குத் தொடங்கவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், பெகாசஸ் விவகாரத்தை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தயாராகிவருகின்றன. காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், மக்களவையின் மற்ற நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு, பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென நோட்டீஸ் அளித்துள்ளார். அதேபோல் மாநிலங்களவையில் சிபிஐ (எம்) மாநிலங்களவை எம்.பி. எலமரம் கரீம், பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.
இதற்கிடையே இன்று காலை 10.30 மணியளவில், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் தங்கள் நாடாளுமன்றக் கட்சி அலுவலகத்தில் கூடி, பெகாசஸ் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவது குறித்து விவாதிக்க இருக்கின்றனர். மேலும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பெகாசஸ் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் விளக்கமளிக்க உள்ளார்.