மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக்கொள்கை மீதான கருத்துக்களை சமர்பிக்கும் கால அவகாசத்தை நீடிக்க பல்வேறு மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. புதிய கல்விக்கொள்கை தொடர்பான கருத்துக்களை தெரிவிக்க ஜூன் 30 ஆம் கடைசி நாளாக அறிவித்திருந்தது. இந்நிலையில் இதற்கான கால அவகாசத்தை நீடிக்க தமிழகத்தின் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோரிக்கை மனு ஒன்றை தயார் செய்தனர். இந்த முயற்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மக்களவை உறுப்பினர் ரவி குமார், காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மாணிக் தாக்கூர் எடுத்தன. பின்பு தயார் செய்யப்பட்ட மனுவில் திமுக கூட்டணி கட்சிகளின் எம்.பிக்களான கனிமொழி, ஆ.ராசா, எஸ்.ஆர்.பார்த்திபன், கே.நவாஸ்கனி, மாணிக் தாக்கூர், டாக்டர். செல்லக்குமார், தொல். திருமாவளவன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அதே போல் சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், டி.ராஜா, டி.கே.ரங்கராஜன் உள்ளிட்டோர்களும் மனுவில் கையெழுத்திட்டனர். தமிழக எம்.பிக்களின் முயற்சிக்கு பல்வேறு மாநில கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் மனுவில் கையெழுத்திட்டு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன. அதனைத் தொடர்ந்து நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை சந்தித்து திமுக கூட்டணி எம்பிக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் "புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை மாநில மொழிகளில் வழங்க வேண்டும் என்றும், அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்ட பின்பே புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது".
மத்திய அமைச்சரின் சந்திப்பின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், ரவிக்குமார், திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் உடனிருந்தனர். அனைத்து கட்சிகளின் எம்.பிக்கள் சார்பில் தமிழக திமுக கூட்டணி எம்பிக்கள் மத்திய அமைச்சரிடம் மனு அளித்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனுவில் சுமார் 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.