தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் , நேற்று நடைபெற்ற சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைத் தேர்வு செய்து அனுமதிப்பது மாநில அரசின் உரிமை என தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ள நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "‘நீட்’ தேர்வை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவை நான் வரவேற்கிறேன். நீட் தேர்வில் உள்ள குறைகளையும் பாகுபாட்டையும் பல முறை எடுத்துச் சொல்லியாகி விட்டது. மாநில அரசின் உரிமைகளை நீட் தேர்வு பறிக்கிறது. மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைத் தேர்வு செய்து அனுமதிப்பது மாநில அரசின் உரிமை. இதில் மத்திய அரசு ஏன் தலையிட வேண்டும்? நம் மாநிலம், நமது அரசுக் கல்லூரிகள், நமது மாணவர்கள், யாரைத் தேர்வு செய்து அனுமதிப்பது என்பது நம்முடைய அதிகாரம் அல்லவா? தமிழ்நாடு ஆளுநர் இந்த மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும்" என கூறியுள்ளார்.