இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுவருகின்றன. அமளிக்கு இடையே சில சட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும், இரண்டு அவைகளும் பெரும்பாலும் ஒத்திவைக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன.
இந்தநிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுவருவதால், மழைக்கால கூட்டத்தொடரின் நாட்களைக் குறைப்பதற்கு மத்திய அரசு ஆலோசனை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடைபெற்றுவரும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13 வரை 19 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதம் நடத்தக் கோரும் எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்த, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரை மீண்டும் நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.